இரகசிய காரணங்கள் பரஸ்பர புகழ்ச்சி சங்கம் - சித்திரபுத்திரன். குடி அரசு - கட்டுரை - 17.09.1933

Rate this item
(0 votes)

கேள்வி:- தோழர் C. ஆண்ட்ரூஸ் அவர்கள் தோழர் காந்தியாரிடத்தில் அதிக அன்புகாட்டிவருவதன் காரணம் என்ன?

பதில்:- தோழர் காந்தியாருக்கு இந்தியப் பாமர மக்களிடம் அதிக மதிப்பு இருக்கிறது. ஆதலால் வெள்ளைக்காரர் காந்தியாரிடம் அதிக அன்பு இருப்பதாய் காட்டிக் கொண்டால் அந்த வெள்ளைக்காரரிடம் இந்தியர்களுக்கு அன்பு ஏற்படுமல்லவா? இதற்கு உதாரணம் வேண்டுமானாலும் சொல்லுகிறேன். தோழர் காந்தியவர்களை தனக்கு சரிசமமாய் பாவித்து சர்க்காரோடு ராஜிபேசிய தோரணையில் சம்பாஷணை நடத்தி ஒப்பந்தம் செய்து இருவர் கையெழுத்தும் ஒரு ஆதாரத்தில் இருக்கத்தக்க மாதிரியாய் நடந்து காந்தியிடம் மிகுந்த அன்பும் மரியாதையும் இருப்பதுபோல் காட்டிக்கொண்ட இர்வின் பிரபு இந்தியர்களின் அன்பையும், மதிப்பையும் பெற்று காந்தியார் வாயிலேயே இர்வின் பிரபுவை மகாத்மா என்று சொல்லும் படியாகக் கூட ஏற்பட்டு விடவில்லையா? ஆதலால் காந்தியாரிடம் மரியா தையும், மதிப்பும், பக்தியும் இருப்பதாக ஆண்ட்ரூஸ் துரை இர்வின் பிரபு போன்றவர்கள் அல்லாமல் ஒரு சாதாரண ஜீவன்-அதாவது வெருப்பாகவும், கேவலமாகவும் கருதப்படும் ஜீவன் நடந்து கொண்டாலும் அது இந்திய மக்கள் மதிக்கவும், மரியாதை செலுத்தவும், புகழ்ந்து உதவுமான யோக்கியதையை அடைந்துவிடும்.

கேள்வி:- தோழர்கள் சீனிவாச சாஸ்திரியார் மாளவியா போன்ற பார்ப்பனர்கள் காந்தியாரின் கொள்கைகளை ஒப்புக் கொள்ளாவிட்டாலும் காந்தியார் நடவடிக்கைகளை ஆதரிக்காவிட்டாலும் ஏன் காந்தியாரை புகழ்கின்றார்கள்? அன்றியும் தோழர் சாஸ்திரியார் மாளவியா ஆகியவர்கள் தனது கொள்கையை ஒப்புக் கொள்வதில்லை என்றும், செய்கையை ஆதரிப்பதில்லை யென்றும் தெரிந்தும் கூட காந்தியார் ஏன் இவர்கள் இருவரிடமும் மரியாதையும், மதிப்பும் வைத்து புகழ்கின்றார்?

பதில்:- பரஸ்பர புகழ்ச்சி சங்கம் என்பதாக ஸ்தாபனமில்லாத பரம்பரை சங்கம் ஒன்று உண்டு. அதன் கொள்கை ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொள்ளுவதின் மூலம் மக்களிடத்தில் மதிப்புப் பெருவது என்பதாகும். காந்தியாரை வெறுக்கும் மக்கள் சாஸ்திரியாரிடத்தில் மதிப் புள்ளவர்களாய் இருப்பார்கள். சாஸ்திரியாரை வெறுக்கும் மக்கள் காந்தி யாரிடம் மதிப்புள்ளவர்களாயிருப்பார்கள். அது போலவே மாளவியாவை வெருக்கும் மக்கள் காந்தியாரிடம் மதிப்புள்ளவர்களாய் இருப்பார்கள். காந்தியாரை வெருக்கும் மக்கள் மாளவியாவிடம் மதிப்புள்ளவர்களாய் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களெல்லோரும் எல்லா மக்களிடமும் மதிப்பும், ஆதரவும் பெறவேண்டு மானால் தங்களில் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லாமல் ஒருவருக்கொருவர் புகழ்மாலை சூடிக்கொண்டால்தான் முடியும். ஆகவே இந்த மூவர்களுடைய வாழ்க்கையும் பொது ஜனங்கள் பேராலே ஏற்பட்டுவிட்டதால் பரஸ்பர புகழ்ச்சி சங்கத்தில் இம்மூவர்களும் ஆயுள் அங்கத்தினர் ஆகவேண்டியது அவசியமாகிவிட்டது.

சாஸ்திரியார் வெள்ளைக்காரர்களிடத்தில் மதிப்பு உண்டாக்கிக் கொண்டவர் ஆதலால் அவர் காந்தியாரைப் பற்றி வெள்ளைக்காரர்களிடத் தில் மதிப்பாய் பேசுவார். அதற்காக காந்தியார் சாஸ்திரியாரிடம் அன்பும், மதிப்பும் இருப்பதாய் காட்டி அவரை பஹமானிக்க வேண்டியதாயிற்று.

மற்றபடி சாஸ்திரியாரால் அவர் வாத்தியாராய் இருந்த காலம் முதல் அவர் மகாகனம் ஆகிநாளதுவரை இந்திய ஜனசமூகத்துக்கு ஏதாவது ஒரு கடுகளவு உபயோகம் ஏற்பட்டதென்று யாராலாவது சொல்லமுடியுமா? அன்றியும் 1920 வருஷத்திய ஒத்துழையாமையின்போது காந்தியாரை அராஜகம் என்றும் அவரை கைதியாக்கவேண்டும் என்றும் அரசாங்கத் துக்கு சிபார்சு செய்வது போல் பேசியதும் அதன்பின் மகாகனம் பட்டம் கிடைத்து அனுபவித்து வருவதும் யாரும் அறியாததா? இந்த காந்தியாரே அறியாததா? அப்படி இருக்க காந்தியார் ஏன் சாஸ்திரியாரை புகழ்கின்றார் சாஸ்திரியாருக்கு ஏன் விளம்பரம் கொடுக்கின்றார் என்றால் அதற்கு வேறு என்ன காரணம் இருக்கமுடியும்? அதுபோலவே மாளவியா அவர்களும் காந்தியாருக்கு அனேக விஷயங்களில் நேர்மாறான அபிப்பிராயம் கொண்டிருந்தும் ஏன் புகழுகிறார்? ஆகவே இந்தப்படி ஒருவரை ஒருவர் புகழ்ந்து தீரவேண்டியது பொது ஜனங்கள் பேரால் வாழவேண்டியவர் களுக்கு அவசியமான காரியமாகும். கேள்வி- பொதுஜனங்கள் பேரால் வாழுகின்றவர்கள் எல்லோரும் இப்படித்தானா? பதில்:-100-க்கு 90 பேர்கள் இப்படித்தான். கேள்வி:- அப்படியானால் அதை ஏன் எல்லோரும் பின்பற்றக் கூடாது.

பதில்:- பொதுஜனங்கள் பேரால் வாழ்பவர்களுக்குத்தான் இது அவசியமாகும். பொதுஜனங்களுக்காக வாழ்பவர்களுக்கு இது அவசிய மற்றதாகும் என்பதோடு இது விரோதமான பலனையும் தரும். ஆதலால் தான் சிலர் அதாவது பொதுஜனங்களுக்காக வாழுகின்றவர்கள் தங்கள் அபிப் பிராயத்துக்கு மாறுபட்டவர்கள் யாராய் இருந்தாலும் அவர்களை தங்குதடைஇன்றியும், தயவு தாட்சண்யமின்றியும் கண்டித்துப் பேசி கெட்ட பெயரை சம்பாதித்துக் கொள்வதுடன் விளம்பரம் பெராமலும் போகின்றார் கள். இந்தப்படி கெட்டபேர் வாங்கவேண்டியதும் அல்லது கெட்டபேர் வருமே என்று பயப்படாமல் இருக்கவேண்டியதும் பொது ஜனங்களுக்காக வேலை செய்கின்றவர்கள் கடமையாகும். பொதுஜனங்களால் பொதுக் காரியங்கள் என்பவைகளுக்காக பாபி என்று பேர் வாங்குபவர்களாலேயே பொது ஜனங்களுக்கு அனேகநன்மையான காரியங்கள் நடந்திருக்கின்றன. இன்னும் ஏதாவது நடக்கவேண்டுமென்றாலும் அப்படிப்பட்டவர்களால் தான் முடியும். இன்றையதினமும் நான் தைரியமாய் சொல்லுவேன் என்னவென்றால் படித்த வர்களாலும், பார்ப்பனர்களாலும், பாதிரிகளாலும் “தேசீயப் பத்திரிகைக்காரர்களாலும், மதப் பத்திரிகைக்காரர்களாலும் எவன் எவன் எதிரியாய், விரோதியாய்,துற்றப்படுபவனாய், விளம்பரம் தரக் கூடாத வனாய் கருதப் படுகின்றானாே” அப்படிப்பட்டவர்களால்தான் மனித சமூகத்திற்கு நன்மை உண்டாகப்போகின்றது. உண்டாகியும் இருக்கின்றது. ஆதலால் பொதுஜனங்களுக்காக வாழுபவர்கள் பரஸ்பர புகழ்ச்சி சங்கத்தில் அங்கத்தினர்களாய் இருக்க மாட்டார்கள்.

ஒரு மனிதன் உண்மையாகவே பொதுஜன நன்மைக்கு? (பொதுஜன நன்மையென்றால் கஷ்டப்படும், இழிவுபடும் மக்களுடைய நன்மைக்கு?) அனுகூலமானவராய் இருக்கின்றான் என்று பார்க்கவேண்டுமானால் அதற்குப் பரீட்சை என்னவென்றால், அந்த மனிதன் சுகப்படும் பெருமை அடைந்திருக்கும் மக்களுக்கு விரோதமாய் இருக்கிறானா? அந்த சுகப்படும் மக்களால் விரோதியாய் பாவிக்கப்பட்டு பாமர ஜனங்களுக்குள் பாபி என்று பரப்பப்படுகிறானா? என்பதை அறிந்து பிறகுதான் அப்படிப்பட்டவனை ஏழைமக்களின் தாழ்த்தப்பட்ட மக்களின் நண்பன் என்று எண்ண வேண்டும். அப்படிக்கு இல்லாமல் எவனெவன் சோம்பேறிக் கூட்டப் படிப் பாளிகளாலும் சூட்சிக்கூட்ட பார்ப்பனப் பாதிரிகளாலும் ஏமாற்றி வயிறு வளர்க்கும் தேசீயப் பத்திரிகைக்காரர்களாலும் புகழப்படுகிறானோ விளம்பரப்படுத்தப்படுகிறானோ அவனெல்லாம் ஏழைமக்களின் தாழ்த்தப் பட்ட மக்களின் - பாடுபட்டு உழைக்கும் மக்களின் விரோதிகள் என்றே கருதவேண்டும். இதுதான் அளவு கருவி.

குடி அரசு - கட்டுரை - 17.09.1933

Read 24 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.